ஜிம் டேவிஸ் கற்பனையில் காமிக்ஸாகவும், பின்னர் கார்ட்டூன் தொடராகவும் உலகமெங்கும் பிரபலமான கதாபாத்திரம் கார்ஃபீல்ட் பூனை. சோம்பேறித்தனமும், நகைச்சுவையும் நையாண்டியும் கொண்ட பூனை கதாபாத்திரம்தான் இந்த கார்ஃபீல்ட். இதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது முழுநீள அனிமேஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது ‘தி கார்ஃபீல்ட் மூவி’. கார்ஃபீல்ட் பூனைக்குட்டிக்கு கிறிஸ் பிராட் குரல் கொடுத்து இருக்கிறார். ‘அலாதீன் ‘ , ‘த லிட்டில் மெர்மெய்ட்‘, ‘ சிக்கன் லிட்டில்‘ உள்ளிட்ட பல அனிமேஷன் படங்களை இயக்கிய மார்க் டிண்டல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சாமுவேல் ஜே ஜாக்சன், விங் ரேம்ஸ், ஹன்னாஹ் வேடிங்கம் உள்ளிட்ட பலர் குரல்களில் கோடை விடுமுறையைக் கொண்டாட வெளியாகியிருக்கிறது இப்படம்.
சிறுவயது குட்டி கார்ஃபீல்ட்டை(குரல்: கிறிஸ் பிராட்) உணவுத் தேடச் செல்ல வேண்டி விட்டுச் செல்கிறது தந்தையான விக் (குரல்: சாமூவேல் ஜாக்சன்). மீண்டும் திரும்பாத தந்தையால் ஏமாற்றமடைந்து அருகில் இருக்கும் உணவகத்தில் ஜான்(குரல்: நிக்கோலஸ் ஹௌல்ட்) என்னும் நல்ல மனிதரால் தத்தெடுக்கப்பட்டு மிகவும் சொகுசாகவும், முதலாளி போலவும் வாழ்கிறது கார்ஃபீல்ட். எஜமானனின் அபரிமிதமான அன்பு, பிடித்த உணவு, உடன் ஓடி(குரல்: ஹார்வே கல்லியன்) என்னும் நாயின் நட்பு மற்றும் உதவிகள் என பந்தாவான வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் கார்ஃபீல்ட்டுக்கு மீண்டும் தனது தந்தை மூலமாகவே ஆபத்து ஒன்று தேடி வருகிறது. ஏற்கனவே தந்தை மீது அதீத வெறுப்பில் இருக்கும் கார்ஃபீல்ட்டுக்கு இந்த சம்பவம் மேலும் வெறுப்பை உண்டாக்குகிறது.
ஆபத்தில் இருந்து கார்ஃபீல்ட் மீண்டதா? உண்மையாகவே கார்ஃபீல்ட் தந்தைதான் இதற்குக் காரணமா என்பது படத்தின் கிளைமாக்ஸ். நக்கலான கார்ஃபீல்ட், பாசமான ஓடி நாய், கம்பீரமான ஓட்டோ காளை, வில்லி ஜின்க்ஸ், பாசமான முதலாளி ஜான், அன்பான தந்தை விக் என அனிமேஷனிலேயே பல ஆச்சர்யமான கேரக்டர்கள் சகிதமாக அவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்களை நிரப்பியிருக்கிறார் இயக்குநர் மார்க் டிண்டல். கிறிஸ் பிராட் , நிக்கோலஸ் ஹௌல்ட், சாமுவேல் ஜாக்சன், ஹார்வே கல்லியன் என இவர்களின் குரலும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளன.
ஜான் டெப்னி பின்னணி இசைக் கலவையும், சவுண்ட் எஃபெக்ட்ஸ்களும் கதையின் விறுவிறு ஓட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. ஆபத்தில் சிக்கினாலும் கூட சேட்டைகள், நக்கல், கிறுக்குத்தனம், லாவகமாக தப்பிப்பது என கார்ஃபீட்ல் & கோ டீமின் குறும்புத்தனம் அனிமேஷன் படம் என்பதையும் மீறி நம்மை மகிழ்வூட்டுகிறது. மொத்ததில் ரியல் ஆக்டர்களைக் கொண்டு உருவாக்கினால் கூட கிடைக்காத அத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள், ஜாலியான தருணங்கள் என நிச்சயம் இந்த கோடை விடுமுறைக்கு ஏற்ற குழந்தைகள், குடும்பப் படமாக மனதில் இடம் பிடிக்கிறது ‘த கார்ஃபீல்ட் மூவி‘ அனிமேஷன் படம்.