திருவனந்தபுரம்: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள அனுஷ்கா, முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கும் படம், அமானுஷ்ய சக்திகள் தொடர்பான கற்பனைக்கதையுடன் உருவாகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்துக்கு ‘கத்தனார்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காட்டிலுள்ள மந்திரவாதி கேரக்டரில் ஜெயசூர்யா, பேய் வேடத்தில் அனுஷ்கா நடிக்கின்றனர். இதில் அனுஷ்கா ஏற்றுள்ள கேரக்டர், கள்ளியங்கட்டு நீலி என்று கூறப்படுகிறது.
தனது சமூக வலைத்தள பதிவில், அனுஷ்கா தோன்றும் ‘கத்தனார் – தி வைல்ட் சோர்சரர்’ படத்தின் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில், ‘இப்படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன்’ என்று கூறியுள்ளார். இப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். ராகுல் இசை அமைக்கிறார். அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் படம் உருவாக்கப்படுகிறது. ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவுக்கு எந்தப் படமும் ஓடவில்லை.
அவர் நடித்த ‘பாகமதி’, ‘நிசப்தம்’, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில், சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்க வந்துள்ளார். மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற ‘ஹோம்’ என்ற படத்தின் இயக்குனர் ரோஜின் தாமஸ், ‘கத்தனார் – தி வைல்ட் சோர்சரர்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் அனுஷ்கா பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகியுள்ளன. முன்னணி ஹீரோயின்கள் திரிஷா, தமன்னா ஆகியோரும் மலையாளப் படத்தில் நடித்து வருகின்றனர்.