ஐதராபாத்: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர், அனுஷ்கா. கடந்த 2020ல் வெளியான ‘நிசப்தம்’ என்ற படத்துக்குப் பிறகு அவர் நடிக்கவில்லை. திடீரென்று அவரது உடல் எடை அதிகரித்ததன் காரணமாகவே அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் நடித்துள்ள படம், ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. அனுஷ்கா ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். மற்றும் ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் நடித்துள்ளனர். மகேஷ் பாபு.பி இயக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளன.
தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது. இப்படம் வெளியாவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இதன் புரமோஷன் பணிகள் தொடங்காததை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ள பதிவில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமான நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி திரைக்கு வரவிருந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி பற்றி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுநர் வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.