அட்லாண்டா: ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் ‘டூப்’ நடிகர், அவரது 3 குழந்தைகளும் ஜார்ஜியாவில் நடந்த விபத்தில் பலியாகினர். ஹாலிவுட் படங்களில் ‘டூப்’ நடிகரான் ‘ஸ்டண்ட்மேன்’ தாராஜா ராம்செஸ் (41) மற்றும் அவரது மூன்று குழந்தைகள், ஜார்ஜியாவில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டம் முடிந்த பின்னர் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரின் மீது டிரெய்லர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தாராஜா ராம்செஸ் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாராஜா ராம்செஸ் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘பிளாக் பாந்தர்’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் ‘ஸ்டண்ட்மேனாக’ தாராஜா ராம்செஸ் நடித்துள்ளார்.
தாராஜா ராம்செஸின் தாயார் அகிலி ராம்செஸ் வெளியிட்ட பதிவில், ‘எனது அழகான, அன்பான, திறமையான மகன் தாராஜா, எனது இரண்டு பெண் பேரக் குழந்தைகளும் விபத்தில் இறந்தனர்’ என்று தெரிவித்திருந்தார். விபத்தில் சிக்கிய மற்றொரு 10 வயது ஆண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த குழந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தாராஜா ராம்செஸின் தாயார் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.