சென்னை: ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்கின்றனர். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைக்கா நிறுவனம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன. இசை அனிருத். இதில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மே 16ம் தேதி நடைபெற இருக்கிறது.
இதில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார். ராம் சரணும் விழாவுக்கு வருகிறார். மேலும் பாலிவுட்டை சேர்ந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்பட சிலர் பங்கேற்க இருக்கிறார்கள். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் ஒன்றாக பங்கேற்றனர். அதன் பிறகு இதில் மீண்டும் சேர்ந்து பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.