பெங்களூரு: 17 வருடங்களுக்கு பிறகு சித்தார்த்தை சந்தித்ததை நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ளார் ஜெனிலியா. ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக ஜெனிலியா நடித்தார். இந்த படம் மூலம்தான் தமிழில் ஜெனிலியா அறிமுகமானார். இப்படம் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிகழ்வு சமீபத்தில் கொண்டாடப்பட்டது.கடைசியாக சித்தார்த், ஜெனிலியா இணைந்து பொம்மரிலு(2006) படத்தில் நடித்தனர். இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்த நாள் விழா பெங்களூருவில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் சித்தார்த் கலந்துகொண்டார். சுதீப்பை வாழ்த்த மும்பையிலிருந்து தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் ஜெனிலியாவும் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற பிரேக் த ரூல்ஸ் என்ற பாடலை சித்தார்த் பாடினார். அப்போது பாடலுக்கு நடனமாடி ஜெனிலியா மகிழ்ந்தார். இதுபற்றி ஜெனிலியா கூறும்போது, ‘பொம்மரிலு (2006) படத்தில் நடித்த பிறகு மீண்டும் சித்தார்த்தை சந்திக்கவே இல்லை. இப்போதுதான் சந்திக்கிறேன். முன்னாவை ஹரிணி (‘பாய்ஸ்’ படத்தில் கேரக்டர்கள் பெயர்) 17 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தருணம், மறக்க முடியாதது’ என்றார். இதை வீடியோவாக வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஜெனிலியா பதிவு செய்திருக்கிறார்.