திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவரது மகள் அர்த்தனா. கடந்த 2016ல் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் முத்துகவு, அன்யேஷிப்பின் கண்டெத்தும், ஷைலாக் உள்பட படங்களில் நடித்தார். சமுத்திரகனியின் தொண்டன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து செம, கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடிக் குழு 2 உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் தன்னை படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறி தன்னுடைய தந்தை விஜயகுமார் வீட்டுக்கு வந்து மிரட்டியதாக சமூக வலைதளங்களில் நடிகை அர்த்தனா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அவர் கூறியது: என்னுடைய தந்தைக்கும், தாய்க்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதனால் நானும், தாயும், பாட்டியும், தங்கையும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தனியாகவே வாழ்ந்து வருகிறோம். தந்தை அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தனது அனுமதி இல்லாமல் படங்களில் நடிக்கக் கூடாது என்று மிரட்டி வருகிறார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. பணத்திற்காக என்னை நடிக்க வைப்பதாக தந்தை கூறுகிறார். ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது. இவ்வாறு நடிகை அர்த்தனா கூறியுள்ளார். இதுகுறித்து அர்த்தனாவின் தந்தையும், நடிகருமான விஜயகுமார் கூறியது: அர்த்தனாவை கனடாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகத் தான் எனது மனைவி முதலில் கூறினார். ஆனால் எனக்கு தெரியாமல் மகளை படங்களில் நடிக்க வைத்துள்ளார். படங்களில் நடிப்பதில் தவறில்லை. ஆனால் சினிமாவில் கவனமாக இல்லாவிட்டால் பல சிக்கல்கள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.