கான்பூர்: இறந்துவிட்டதாக நாடகமாடிய நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் அவர்கள் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பிரச்னையால் இறந்ததாக அவரது மேலாளர் மூலம் செய்தி வெளியானது. ஆனால், அடுத்த நாள் பூனம் பாண்டே வெளியிட்ட பதிவில், தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்று இறப்பு செய்தியை வெளியிட்டதாக தெரிவித்தார். இவரது பதிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் கூட, பலர் கடுமையாக பூனம் பாண்டேவை விமர்சித்தனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் போலீசில் பைசான் அன்சாரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
பைசான் அன்சாரி அளித்த புகாரில், ‘பூனம் பாண்டேவும் அவரது கணவர் சாம் பாம்பேவும் சேர்ந்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து தவறான செய்தியும், அந்த நோயை கேலி செய்யும் வகையில் மரண அறிவிப்பையும் வெளியிட்டனர். அவர்கள் தங்களது சொந்த விளம்பரத்திற்காக அவ்வாறு அறிவித்தனர். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும். அவதூறு பரப்பியதால் அவர்கள் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும். அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து அவர்களை கான்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இவ்விவகாரம் குறித்து போலீசார் வழக்கு மட்டுமே பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பே தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.