சர்தார் விமர்சனம் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் , லைலா சன்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் சர்தார். சித்தப்பா வளர்ப்பில் வளர்ந்திருக்கும் விஜய் பிரகாஷ் ஏதேனும் ஒரு சமூகம் சார்ந்த சம்பவங்கள் மூலம் தன்னை சமூக வலைத்தள ட்ரெண்டிங்கிலேயே வைத்திருக்கும் காவல் அதிகாரி. இதனால் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு விஜய் பிரகாஷ் மேல் கோபம் வருகிறது. நீ என்ன செய்தாலும் தேச துரோகியின் மகன் தான் என உயர் அதிகாரிகள் விஜய் பிரகாஷை ஏளனம் செய்கின்றனர். தேசத்துரோகி ஆகும் அளவிற்கு விஜய் பிரகாஷின் தந்தை என்ன செய்தார் என்ன பிரச்சனை என்பதை மீதிக்கதை. ராணுவ அதிகாரி காவல்துறை அதிகாரி என அந்த மிடுக்கும் தோரணையும் நடிகர் கார்த்திக்கு அப்பட்டமாக பொருந்தி போகிறது. பல இடங்களில் சிறுத்தை படத்தின் ராக்கெட் ராஜா கார்த்தியும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது கதையை கலர்ஃபுல்லாக மாற்றி இருக்கிறது. ஸ்டைலிஷ் கெத்து வக்கீலாக ராஷி கண்ணா எனில் தைரியமான கிராமத்து மாமன் மகளாக ரஜீஷா விஜயன் என இருவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கின்றனர். இரண்டு நாயகிகளும் கதையின் போக்கிற்க்கும் அருமையாகவே பயன்பட்டுள்ளனர். பி எஸ் மித்ரன் என்றாலே சமூகம் சார்ந்த ஏதேனும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு அதை ஆழமாக விவரித்து மக்களை அலர்ட் செய்வதுதான் அவர் படங்களின் வேலை. அந்த வேலையை சர்தார் படம் செய்திருக்கிறதா என்றால் ஓரளவுக்கு செய்திருக்கிறது என்று சொல்லலாம். பல இடங்களில் லாஜிக் நிறையவே தொங்குகிறது. நல்ல கதை, ஆனால் திரைக்கதை ஓட்டத்தில் இன்னும் சுவாரஸ்யமும் தெளிவும் இருந்திருந்தால் இந்தியன் மற்றும் ரமணா படங்களுக்கு அடுத்து இப்படம் இன்னும் அதிகமாகவே பேசப்பட்டிருக்கும். ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவில் படம் பல இடங்களில் பிரம்மாண்டமாகவும், லைட்டிங் மற்றும் பிரேம்களில் ரிச் லுக்கிலும் இருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சொரக்கா பூவே, பாடல் மற்றும் ஏறுமயில் ஏறி பாடல்கள் படம் முடிந்த பிறகும் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆக்ஷ்ன் படத்திற்கு ஏற்ப ஜீவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு அதிரடி கூட்டி இருக்கிறது. படத்திற்கு அடுத்த சிறப்பு ஆர்ட் டைரக்ஷன் பல இடங்களில் மாஸ்காட்டுகின்றன. மொத்தத்தில் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு அதில் கதை செய்ததற்கே இயக்குனர் பி எஸ் மித்திரனுக்கு பாராட்டுக்கள். சீரியஸான ஆக்சன் திரைப்படம் பார்க்க விரும்புவோர் சர்தார் படத்தை தேர்வு செய்யலாம்.
31