பிரியங்கா அருள் மோகனின் அண்ணன் மகள் ஜாராவை மர்ம நபர் கடத்திவிட, அவரை ராணுவ டாக்டர் சிவகார்த்திகேயன் எப்படி மீட்கிறார் என்பது கதை. சாதாரண ஏரியா ரவுடியில் தொடங்கி, சர்வதேச நெட்வொர்க் வரை நீளும் பக்கா கிரைம் திரில்லர் படம். வழக்கமான பரபரவென்ற ஹீரோயிச ஆக்ஷன் இல்லாமல், கடத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தையும், கடத்தலை தொடங்கிய ஏரியா ரவுடிகளையும் கொண்டு, கோவா வரை பக்கா ஸ்கெட்ச் போட்டு பிடிக்கும் கதை. காமெடி கலந்த ஹீரோவின் கதை என்றால் சிவகார்த்திகேயனுக்கு அல்வா சாப்பிடுவது போல். அதை மிக எளிதாக செய்கிறார். சட்டை பட்டனை கழுத்து வரை மாட்டிக்கொண்டு, எற்கெடுத்தாலும் வைத்தியம் சொல்லும் சாஃப்ட் டாக்டராக இருந்துகொண்டே மாஸ்டர் பிளான்கள் போட்டு, பக்காவான ஆக்ஷன் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். ஹீரோயின் பிரியங்கா அருள் மோகனுக்கு அதிக வேலை இல்லை. யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி டீமின் காமெடி படத்துக்கு பெரிய பலம். வினய் ‘ரிச்’ வில்லனாக மிரட்டுகிறார். அனிருத் பின்னணி இசையும், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும் கதைக்கு தேவையானதை கொடுத்துள்ளது. கோவா தீவின் அழகையும், அதற்குள் இருப்பதாக படம் சொல்லும் ரகசியத்தையும் அற்புதமாக படமாக்கி இருக்கின்றனர். கோலமாவு கோகிலா பாணியிலேயே சீரியசான ஒரு கதையை ரொம்ப ஜாலியாக சொன்னவிதத்தில், மீண்டும் கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். சிறுமிகள் கடத்தல் பற்றி பல படங்கள் வந்துள்ளன என்றாலும், கதை சொன்னவிதம் மற்றும் வித்தியாசமான திரைக்கதையால் படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார். கைகளை வைத்து யோகிபாபு வில்லன்களுடன் ஆடும் ஆட்டம் தேவையில்லாத இணைப்பு. படத்துக்கு பாடல்கள் தேவையில்லை என்றாலும், ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற ஹிட் பாடலை வீணாக்க வேண்டாம் என்று இறுதியில் சேர்த்துள்ளனர். டாக்டரின் சிகிச்சையில் சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ்.
5