ஒய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சசிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா, வையாபுரி, முருகதாஸ், கதாநந்தி நடித்துள்ள படம், ‘தலைக்கூத்தல்’. கண்ணன் நாராயணன் இசையில் யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அமெரிக்காவின் மென்பொருள் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், அறிமுக இயக்குனருக்கு வழங்கப்படும் கொல்லப்புடி னிவாஸ் விருதுபெற்ற ‘லென்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனரானார். ‘லென்ஸ்’ படத்தை தொடர்ந்து ‘தி மஸ்கிடோ பிலாஸபி’ படத்தை இயக்கிய அவர், தற்போது தேசிய அளவிலான ‘தொடர்-திரைப்படம்’ (ஆந்தாலஜி) ஒன்றில், ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். இது விரைவில் வெளியாகிறது. ‘தலைக்கூத்தல்’ குறித்து ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘வயது முதிர்ந்தவர்களை சொந்தக் குடும்பத்தினரே கொல்லும் இதுபோன்ற ஒரு பழக்கம், தென்தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதுபற்றி பல்வேறு தளங்களில் ஆய்வு செய்தேன். இது சரியா, தவறா என்று விவாதிப்பதை விட, எந்த மாதிரி சூழ்நிலையில் குடும்பத்தினர் இதுபோன்ற முடிவை எடுக்கின்றனர் என்று யோசித்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன. அதற்கான விடையைத் தேடுவதே இப்படத்தின் நோக்கமாகும்’ என்றார்.
42