நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இவர் பட்ட கஷ்டங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். குடும்பத்திலிருந்து வெளியேறி நடிக்க வந்தவர் இந்தி நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் துவண்டார். கஷ்டங்களை கடந்து இன்று பொருளாதார ரீதியாகவும், புகழிலும் தனக்கென தனி இடம்பிடித்திருக்கிறார். அவரிடம் எப்போது கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்றதற்கு விரக்தியான பதில் அளித்தார். அவர் கூறியதாவது: நான் இப்போதுதான் என் வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கியிருக்கிறேன். இதை நான் உணர்வுப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பொருளாதாரத்திலும் ஒரு நிறைவு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் குடும்பம், குழந்தை என்றால் அதற்கு நான் ஆள் இல்லை. இந்த பேக்கேஜுடன் யாரும் வந்தால் அவர்களுக்கு ஒதுக்க என்னிடம் நேரம் இல்லை.இந்த உலகம் மதிப்புமிக்கது. அதில் நிறைய செய்ய வேண்டி உள்ளது. என்னைப்பற்றி நான் சிந்திக்க தொடங்கியிருப்பது இதுதான் முதல்முறை. கொஞ்சம் சுயநலமாக இருந்து, நான் சம்பாதித்ததை அனுபவிக்க எண்ணுகிறேன். இன்னொரு குடும்பத்துக்காக முதலீடு செய்ய எனக்கு சக்தியும் இல்லை. நேரமும் இல்லை. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.15 வயதில் நான் வீட்டிலிருந்து தனி ஆளாக வெளியில் வந்தேன். இன்றைக்கு அதிர்ஷ்டவசமாக எனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். வெற்றியும், எனது சம்பாத்தியமும்தான் என்னை குடும்பத்தினருடன் இணைத்திருக்கிறது. சினிமாவில் நான் வெற்றிபெறாமல் போயிருந்தால் எனது குடும்பத்தையும் எனது கனவையும் நான் தொலைத்திருப்பேன். இவ்வாறு கங்கனா ரனாவத் கூறி உள்ளார்.
5