கொச்சி, மார்ச் 9: கல்லீரல் பாதிக்கப்பட்ட நடிகர் பாலா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் ‘அன்பு’ படம் மூலம் அறிமுகமானவர் பாலா. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரரான இவர், ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா அப்பா செல்லம்’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 15 வருடத்துக்கு முன் மலையாளத்தில் நடிக்கத் தொடங்கிய அவர், அங்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரலில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. பாலாவின் தாய் மற்றும் மனைவி எலிசபெத் அவரை உடனிருந்து கவனித்து வருகின்றனர். தகவல் அறிந்து சூர்யா படத்தின் படப்பிடிப்பிலிருந்து இயக்குனர் சிவா, கொச்சி புறப்பட்டு சென்றுள்ளார்.
6