ஐதராபாத்: நடிகை பூஜிதா, தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. 43 வயதாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இதுவரை திருமணம் செய்யவில்லை. பல நடிகைகளுடன் இவரது பெயர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. இப்போதும் அதுதான் நடந்துள்ளது. தெலுங்கில் சில படங்களில் நடித்திருப்பவர் பூஜிதா. இவரும் தேவிஸ்ரீ பிரசாத்தும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பூஜிதா கூறும்போது, ‘என்னை பற்றி இதுவரை வதந்தி வந்ததே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக இப்படியொரு புரளியை கேள்விப்படுகிறேன். தேவிஸ்ரீ பிரசாத்துடன் நான் டேட்டிங் கூட சென்றதில்லை. அப்படி இருக்கும்போது, நாங்கள் திருமணம் செய்துகொண்டதாக சொல்வது எதைவைத்து என்றுதான் தெரியவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நான் சிங்கிளாகவே இருக்கிறேன்’ என்றார். தேவிஸ்ரீ பிரசாத் தரப்பில் கூறும்போது, ‘அவ்வப்போது ஏதேனும் ஒரு நடிகையுடன் இணைத்து பேசுவது சிலருக்கு வாடிக்கை. அந்த வகையில்தான் இந்த தகவலையும் தேவிஸ்ரீ பிரசாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்’ என்றனர்.
30