பல வருடங்களுக்குப் பிறகு ஜனகராஜ் நடித்த படம், ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கிய இதில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்தனர். தற்போது ஜனகராஜ் முக்கிய வேடமேற்றுள்ள ‘ஒபாமா’ படத்துக்காக விஜய் சேதுபதி பணம் வாங்காமல் நடித்துள்ளார். ஜே.பி.ஜே பிலிம்ஸ் ஜெயசீலன் தயாரித்துள்ள இப்படத்தில் பிரித்வி பாண்டியராஜன், பூர்ணிஷா, இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ்கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, தளபதி தினேஷ், கோதண்டம், செம்புலி ஜெகன் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்தது குறித்து இயக்குனர் நானி பாலா கூறுகையில், ‘இன்றைய சமூக சூழ்நிலையைப் பாதிக்கும் சில விஷயங்களை ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருக்கிறேன். இதில் சிறப்பு வேடத்தில் நடிக்க வாக்கு கொடுத்திருந்த ஒரு முன்னணி நடிகர் திடீரென்று மறுத்துவிட்ட நிலையில், இந்த விஷயத்தை ஜனகராஜிடம் சொன்னேன். உடனே அவர் பிரேம் குமாரிடம் தகவல் சொன்னார். அவர் மூலமாக விஜய் சேதுபதியின் பார்வைக்கு எனது ஸ்கிரிப்ட் அனுப்பப்பட்டது. அதைப் படித்துவிட்டு ஓ.கே சொன்ன விஜய் சேதுபதி சம்பளம் வாங்காமல் நடித்தார். அவரது வளசரவாக்கம் ஆபீசுக்கு அருகிலேயே ஷூட்டிங் நடந்தது. சீனியர் நடிகர் ஜனகராஜ் மீது கொண்ட மரியாதை காரணமாக நேரம் ஒதுக்கி ஆர்வத்துடன் நடித்த விஜய் சேதுபதிக்கு நன்றி. ‘ஆண் பாவம்’ முதல் சிலரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய நான், இப்போது ‘ஒபாமா’ படத்தை இயக்கியுள்ளேன்’ என்றார்.
26