மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ,சரத்குமார், ராதிகா சரத்குமார், பாலாஜி சக்திவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வானம் கொட்டட்டும். “உன்ன தொட்டு பேசுறதா இல்ல தூரமா நின்னு பேசுறதா தெரியல?!” இந்த ஒரு வசனமும் அதற்கான காட்சியமைப்பும் “வானம் கொட்டட்டும்” படத்த தவிர்க்கமுடியாத படமா மாத்தி இருக்கு. வழக்கமான வஞ்சம் தீர்க்கும் கதைதான் அதை தனசேகரன் எப்படி கையாண்டார் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பேனர் எப்படி கையாண்டு இருக்கிறது என்பதுதான் முழு படம். “புள்ள குட்டிகள போய் படிக்க வைங்கடா”, “படிப்பு முக்கியம்”, இப்படி பல படங்களின் கிளைமாக்ஸ் இந்த படத்துல ஆரம்பமாய் இருந்திருக்கு. முதுகுல அரிவாளுடன் வந்து விழும் பெரியப்பாவை கண்டு அதிர்ந்து போகும் சிறுவன் செல்வம் (விக்ரம் பிரபு) ஓடிச்சென்று தன் குடும்பத்தாரிடம் சொல்ல அண்ணன் நிலை கண்டு பதறிப் போகும் தம்பி போஸ் (சரத்குமார்) அதே அரிவாளால் அண்ணனை வெட்டியவர்களின் தலையை எடுக்க கதைக்களம் ஆரம்பமாகிறது. இனி இந்த சூழலில் என் குழந்தைகளை வளர்க்க மாட்டேன் என குழந்தைகளுடன் சென்னைக்கு புறப்பட்டு விடுகிறார் சந்திரா (ராதிகா). ஒற்றை ஆளாக நின்று குழந்தைகளை வளர்க்கிறார். இன்னொரு பக்கம் போஸால் கொல்லப்பட்டவர்களின் குடும்பமும் அவதிப்பட, இந்தப்பக்கம் குழந்தைகள் வளர இன்னொரு பக்கம் வஞ்சகமும் வளர்ந்துகொண்டே செல்கிறது முடிவு என்ன என்பது மீதி கதை. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்தா, சாந்தனு, அமிதாஷ், இப்படி படத்தில் எங்கு திரும்பினாலும் ஏகப்பட்ட நடிகர்கள் ஏகப்பட்ட பாத்திரப் படைப்புகள் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனித்தனியாக சின்ன சின்ன கதைகள். ஆனால் கதை சொல்லும் காலம் தான் ரொம்ப குறைவாக அமைந்துவிட்டது. அதனாலேயே சில கேரக்டர்கள் ஆங்காங்கே துண்டாக நிற்பது போலவும் தெரியும். உதாரணத்திற்கு மடோனா செபஸ்டியனின் கதை எந்த போக்கில் செல்கிறது என்பது குழப்பத்துடனேயே செல்லும். எனினும் செல்வம் பாத்திரம் ஹீரோவாகிவிட்டார், அவருக்கான ஹீரோயின் பாத்திரம் கொஞ்சம் கனமாக இருக்க வேண்டுமே அதனாலேயே திணிக்கப்பட்ட கதையாகவே மடோனாவின் காட்சிகள் தெரியும். ஆனாலும் செல்வம் பாத்திரம் மணிரத்தினத்தின் முந்தைய படங்களான ஆயுத எழுத்து இன்பசேகரன் காற்று வெளியிடை விசி பாத்திரங்களின் நீட்சியாக தெரிவதை மறுக்க முடியாது. விக்ரம் பிரபுவும் இதற்கு முந்தைய படங்களை காட்டிலும் இந்தப்படத்தில் தன் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். மடோனா -விக்ரம் பிரபு காதலும் கூட ஆயுத எழுத்து பாணியில் பாலத்தின் மீது நடக்கும். இந்தப் பக்கம் ஆயுத எழுத்து எனில் அந்தப் பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் ,அமிதாஷ், சாந்தனு என ஒரு சிறு முக்கோண காதல் கதை போல் உருவாக்கி அதில் சாந்தனு -ஐஸ்வர்யா ராஜேஷ் இணைத்து அலைபாயுதே ஸ்டைல் காதல் ப்ரபோஸ் காட்சியும் அமைத்திருப்பார் இயக்குனர். இந்தக் காதல் காட்சிகளில் பாத்திரங்களை காட்டிலும் பளிச்சிடுகிறார் இசையமைப்பாளர் சிட் ஸ்ரீராம். அதே சிட் ஶ்ரீராம் பல இடங்களில் இசைக்கு பதிலாக தன் குரலையே பின்னணி இசையாகி கொடுத்திருப்பது சற்றே இடைஞ்சலை ஏற்படுத்துகிறது. அதை குறைத்திருக்கலாம். கண்ணு தங்கம் என் உயிர் காற்று இரண்டு பாடல்களும் மனதை பிசையும். படத்தின் இரண்டு மிகப்பெரும் ஆளுமைகளாக ராதிகாவின் பாத்திரமும் பாலாஜி சக்திவேல் பாத்திரமும் ஒவ்வொரு பிரேமிலும் தனித்துவம் பெறுகின்றன. குறிப்பாக ராதிகா என்ன லேடி சார் அவங்க அவர் திரையில் தோன்றினாலே சுற்றி எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் ஒற்றை ஆளாக நம் கண்களை திருடிக் கொள்கிறார்.சரத்குமாரின் பாத்திரமே ராதிகாவின் பாத்திரத்தால் தான் சிறப்பாக பளிச்சிடுகிறது எனலாம். ராதிகாவை அடுத்து பாலாஜி சக்திவேல் பாத்திரம் பல இடங்களில் அப்பாவி முகமும் பாசம் நிறைந்த உணர்வோமாக நம்மை ஆட்கொள்கிறது. இத்தனைக்கும் தூணாக நின்று காட்சிக்கு காட்சி உணர்வுகளை கடத்துகிறது வானம் கொட்டட்டும் என்னும் பெயருக்கு ஏற்றார் போல் கொட்டும் மழை. மணிரத்தினத்தின் ட்ரேட்மார்க் இந்த மழை தான். உணர்வுகளை மிகக் கச்சிதமாக மழை கொட்டும் காட்சியில் வெளிப்படுத்தி விடுவார். அவரது வழித்தோன்றலான தனசேகரன் மழையை ஒரு பாத்திரமாகவே மாற்றியிருக்கிறார். நந்தா பாத்திரம் இன்னமும் சற்று கவனமாக உருவாக்கியிருக்கலாம். சட்டென்று யோசித்தால் மிஷ்கின் பட வில்லன் போல் இருக்கிறார் நந்தா. படத்தின் சில வசனங்கள் நம்மையும் மீறி அடடே சொல்ல வைத்தது மணி-தனசேகரன் கூட்டணியின் வெற்றி என்றே சொல்லலாம். “எனக்கு எதுலயும் நம்பிக்கை கிடையாது ஒரே நம்பிக்கை தான் செல்வம்”. இது காற்று வெளியிடை விசி பாத்திரத்தின் டச் விசிக்கு விசிய பிடிக்கும் .இருக்கும் விஷயத்தை எந்த ஒரு கற்பனைகளையும் புகுத்தி காட்சி படுத்தாமல் எதார்த்தமாக கொடுப்பதுதான் மணிரத்தினத்தின் ஸ்டைல் அவரது வகுப்பறையில் இருந்து வெளிவந்த மாணவர் மட்டும் விதிவிலக்கா என்ன தொட்டுப் பேச முடியாத ஜெயில் விசிட்டிங் ஏரியா. அதிகம் சத்தம் போட்டு பேசாத போலீஸ்காரர், மிக யதார்த்தமாக வேலை நடக்கும் பிரின்டிங் ஆபீஸ் என படம் நெடுக நிறைய பளிச் எலிமென்ட்டுகள். ப்ரீத்தா ஜெயசேகரனின் ஒளிப்பதிவில் சென்னை இதுவரை இல்லாத புது வடிவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள். ஒரு ஆண் அவசரத்தில் எடுக்கும் முடிவால் ஒரு பெண்ணின் நிலை என்ன ஆகும் என்னும் பல கிராமப்புற பெண்களின் உள்ளக் குமுறலை ராதிகா என்னும் ஆளுமை மூலம் கொட்டித் தீர்த்து இருக்கிறது இந்த வானம் கொட்டட்டும்.
10