13
மலையாள நடிகை மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமானார். இதையடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாஸ்டர் படத்தின் பூஜையன்று முதன்முதலில் விஜய்யை நான் சந்தித்தேன். அதிக சந்தோஷத்துடனும், ஆனால் லேசான பயத்துடனும் அவருக்கு அருகில் நின்றிருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, அன்று முழுவதும் நாங்கள் பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால், அடுத்த 6 மாதங்களில் அவர் என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டார். புதுப்புது விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட அவர், தன்னால் முடிந்தவரை எல்லா விஷயங்களை பற்றியும் தெரிந்து வைத்திருப்பார். அன்றாடம் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவார். மிகவும் அன்பானவர். தயிர் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார். ஒவ்வொரு செயலுக்கும் அதன் நேர்மறை பக்கத்தை சுட்டிக்காட்டுவார். மிகவும் குறைவாக பேசுவார். ஆனால், அவரைப்போல் சொன்ன வார்த்தையையும், வாக்குகளையும் நினைவில் வைத்து, தகுந்த சந்தர்ப்பத்தில் அதை நிறைவேற்றும் யாரையும் நான் சமீபத்தில் பார்த்ததில்லை’ என்று தெரிவித்துள்ளார்.