சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் நடப்பதாக சொல்லப்படும் கற்பனைக் கதை இது. தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் ஒன்றில், தனது எளிய மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார் அனலீசன் (தனுஷ்). அந்தக் கிராமத்தில் முன்னோர்கள் கட்டிய கோயிலுக்குள், விலை மதிக்க முடியாத பவளக்கல்லால் செய்யப்பட்ட கோரனார் சாமி சிலை இருக்கிறது. சாதி வெறி பிடித்த மன்னர், அந்த மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார். மக்கள் வசிக்கும் இடத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர், ஆங்கிலேயர்கள். இந்நிலையில், அனலீசன் ஆங்கிலப்படையில் சேர்ந்து பணியாற்றுகிறார். ஆனால், தன் சொந்த மக்களையே கொல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது வெளியேறுகிறார். அவரை, கொலைகாரன் என்று ஊர் மக்கள் துரத்துகின்றனர். இதனால், ஆங்கிலேயர் களிடம் கொள்ளையடித்து மக்க ளுக்கு வழங்கும் தீவிரவாத இயக்கத்தில் அனலீசன் சேருகிறார். பிறகு மன்னருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிரியான அனலீசன், இறுதி யில் அவர்களைப் போராடி வென்று, தனது மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்தாரா என்பது மீதி கதை. சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் நடந்த கதைகள் பல படங்களில் சொல்லப்பட்டு இருந்தாலும், சாதிக்கொடுமையின் பின்னணியில் சுதந்திரப் போராட்டத்தை இணைத்து சொல்லப்பட்டுள்ள இக்கதை புதிது. அரும்பு மீசை இளமைக்காலம், ஆங்கில ராணுவ சிப்பாய், பிறகு கொள்ளைக்காரனும், புரட்சிக்காரனுமாக மாறிய அதிரடி தோற்றம் ஆகிய 3 மாறுபட்ட கேரக்டருக்கான உடல்மொழி, குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளார், தனுஷ். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக நிற்கும் புரட்சிக்காரன் தோற்றம் பிரமிக்க வைக்கிறது.
நிவேதிதா சதீஷ், பிரியங்கா அருள் மோகனை காதல் காட்சிக்குப் பயன்படுத்தாமல், கதையுடன் இணைந்து பயணிக்க வைத்துள்ளனர். புரட்சிக்காரியாக வரும் நிவேதிதா சதீஷ் சண்டைக் காட்சியில் மிரட்டியுள்ளார். அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் நடித்துள்ளார் பிரியங்கா அருள் மோகன். மேலும் தனுஷுக்கும், பிரியங்கா அருள் மோகனுக்கும் இடையிலான நேசம் கவனமாக கையாளப்பட்டுள்ளது. மன்னராக ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிதி பாலன், ஜான் கொக்கேன், இளங்கோ குமாரவேல், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், காளி வெங்கட், போஸ் வெங்கட் ஆகியோர் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ்குமார், அதிரடியாக மாஸ் காட்டிவிட்டுச் செல்கிறார். சுதந்திரப் போராட்டம், சாதி வெறிக்கு எதிரான போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைத்து, காட்சி அனுபவத்துடன் கதை சொன்னதில் வெற்றிபெற்றுள்ளார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு ஆகியவை இப்படத்தை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்தி இருக்கின்றன. நல்ல கதை இருந்தும், லாஜிக்குகள் இல்லை என்பது மைனஸ். சுதந்திரப் போராட்ட காலக்கட்ட கதையில், நவீன ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரமாண்ட சண்டைக் காட்சிகளுக்கான காரணங்கள் வலுவாக இல்லை. வன்முறைக் காட்சிகள் பயமுறுத்தினாலும், ‘கேப்டன் மில்லர்’ தமிழ் சினிமாவுக்கு புதியவர்.