மாஸ்கோ: உக்ரைன் அதிபரை சந்தித்ததின் எதிரொலியாக ஹாலிவுட் நடிகர்கள் உள்பட 25 பிரபலங்கள் தங்களது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர்கள் பென் ஸ்டில்லர், சீன் பென் உள்பட 25 பிரபலங்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடையை விதித்து அந்நாடு அறிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்ய மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் பலவகைகளில் தடைகளை விதித்து வருகிறது. அதற்கு எதிர்வினையாக ஹாலிவுட் நடிகர்கள் பென் ஸ்டில்லர், சீன் பென் உள்பட 25 பிரபலங்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். அதேபோல் மற்றொரு நடிகரான சீன் பென்னும் ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.
31