சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் 3 இடங்களில் சிறந்த மதிப்பெண் பெற்ற 1000 மாணவர்களுக்கு நடிகர் விஜய் விருது மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார். பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். விழாவில் விஜய் பேசியதாவது: பள்ளிக்குப் போவது, கல்லூரி போவது, பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வி அல்ல என விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியுள்ளார். அதைக் கற்று, அதையெல்லம் மறந்து பிறகு எது எஞ்சியுள்ளதோ அது தான் கல்வி என அவர் சொல்லியுள்ளார். நாம் கற்கும் கல்வியை கடந்து நம்மிடம் எஞ்சி இருப்பது நமது குணமும், சிந்திக்கும் திறனும் தான். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் முழுமையான கல்வி அறிவை பெற முடியும்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய மற்றும் நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். நமது விரலை வைத்து நமது கண்ணை குத்திக்கொள்ளும் பணியை நாம் செய்து கொண்டுள்ளோம். நான் எதைச் சொல்ல வருகிறேன் என்றால் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உங்கள் அப்பா, அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் எனச் சொல்லுங்கள். இது நடந்தால் உங்கள் கல்வி முறை முழுமை அடையும் என நான் நினைக்கிறேன்.