சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அப்போது, 2009 முதல் 2014ம் ஆண்டுகள் வரை சிறப்பாக நடித்த நடிகர், நடிகைகளுக்கு விருது, பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 4ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்கள்.திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014ம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படம் சிறப்பு பரிசு ரூ.75 ஆயிரம், 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26,25,000 காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. சின்னத்திரை விருதுகள் 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008 – 2009ம் கல்வியாண்டு முதல் 2013 – 2014ம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ.1,50,000 காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர், தொழில்நுட்பககலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 314 பேருக்கு ரூ.52 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையும் விருதாளர்களின் பெயர் பொறித்தத் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்கள் அனைவரும் விழாவிற்கு மாலை 4 மணிக்கு தவறாமல் அரங்கத்திற்கு நேரில் வருகைதந்து, பதிவு செய்தல், கையொப்பமிடுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2009 – 2014ம் ஆண்டு வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் சிறப்பாக நடித்த நடிகர், நடிகைகளுக்கு விருது, பரிசுகள்: கலைவாணர் அரங்கில் நாளை பிரமாண்ட விழா
31