சென்னை: மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள படம், ‘வெப்பன்’. சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப் நடித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘சவாரி’ என்ற படத்தையும், ஓடிடியில் வெளியான ‘வெள்ளை ராஜா’ என்ற தொடரையும் இயக்கியிருந்த குகன் சென்னியப்பன், தற்போது ‘வெப்பன்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படமான இதில், யாராலும் அழிக்க முடியாத மனித ஆயுதமாக சத்யராஜ் கேரக்டர் அமைந்துள்ளது. காட்டில் அநாதையாக அலையும் குட்டி யானைகளைப் பாதுகாத்து வளர்ப்பது அவரது வேலை. அவருடன் நிஜ குட்டி யானை நடித்துள்ளது. வாகமன்னில் கதை நடக்கிறது. சத்யராஜ் சூப்பர் பவர் கொண்ட கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு சூப்பர் பவர் கிடைத்ததை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிக்காக, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இளம் வயது சத்யராஜை உருவாக்கினோம். இந்திய திரையுலகில் ஏஐ மூலமாக கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்வது இது முதல்முறை. யூடியூபர் வேடத்தில் வசந்த் ரவி நடிக்கிறார். வித்தியாசமான திரைக்கதை மற்றும் காட்சிகளுடன் ‘வெப்பன்’ படம் உருவாகியுள்ளது.
80