விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ என்ற படத்தில், திரிஷாவின் இளம் வயது கேரக்டரான ஜானுவாக நடித்தவர் கவுரி கிஷன். பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்த அவர், தற்போது முழுமையான ஹீரோயினாக நடித்துள்ள படம், ‘அடியே’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக அவர் நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கவுரி கிஷன் கூறுகையில், ‘ஜானுவாக நடித்த பின்பு, அதுபோன்ற கேரக்டரிலேயே ரசிகர்கள் என்னை எதிர்பார்த்தனர்.
அதுபோன்ற வாய்ப்புகள்தான் எனக்கும் வந்தன. எனவே தெலுங்கிலும், மலையாளத்திலும் அதை தாண்டி ஹீரோயினாக நடித்து விட்டேன். தமிழில் ‘அடியே’ என்ற முழுமையான காதல் கதை கொண்ட படத்தில் நடித்துள்ளேன். இது எனது கேரியரில் முக்கியமான படம். ஜானு கேரக்டர் அனைவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்தது போல், இப்படத்தின் கேரக்டரும் பதியும் என்று நம்புகிறேன். ‘அடியே’ படம், கண்டிப்பாக எனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும்’ என்றார்.