திருவனந்தபுரம்: மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்: ஆடுஜீவிதம்’ என்ற படத்துக்கான பிரத்யேக இணையதள வெளியீட்டு விழா நடந்தது. அப்போது இப்படத்தை ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்ற படத்துடன் ஒப்பிட்டு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டி வாழ்த்தினார். இதனால் படக்குழுவினர் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘இப்படம் ரசிகர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவகையில் இதை இசை அமைப்பாளரின் படம் என்று கூட சொல்லலாம்.
ஒட்டுமொத்த டீமும் படத்துக்காக தங்கள் ஆன்மாவைக் கொடுத்து உழைத்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள உழைப்பை பார்த்தபோது, சினிமா மீதான எனது நம்பிக்கை மீண்டும் தெளிவடைந்துள்ளது’ என்றார். பென் யாமின் எழுதிய இக்கதையை பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். ஹீரோ கேரக்டருக்கு உயிர் கொடுக்க, பிருத்விராஜ் சுகுமாரன் கடுமையாக உழைத்துள்ளார். ஆடியோ வெளியீட்டு விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. வரும் 28ம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.