சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ரஜினியுடன் முதல் முறையாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோரும் இணைவதால் படம் தொடர்பாக ரசிகர்களிடம் ஆவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பக்கத்தில் நேற்று மாலை 6 மணிக்கு ‘ஜெயிலர்’ அப்டேட் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக காட்சியளிக்கிறார்கள். கடைசியில் ஸ்டைலான பின்னணி இசை ஒலிக்க, கார் கதவை காலால் திறந்து ரஜினி வெளியே வரும் காட்சி இடம்பெறுகிறது. இந்த வீடியோ வெளியானதும் இணையதளங்களில் வைரலானது. இதில் ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.