மிகப்பெரிய பணக்காரர் யோகி பாபுவுக்கு அரண்மனை போன்ற ஒரு பங்களா இருக்கிறது. அவரது தந்தை விஞ்ஞானி மதன்பாப், தனது ஆராய்ச்சியின் மூலம் பல சூப்பர்மேன்களை உருவாக்குகிறார். அந்த பார்முலாவை திருடிச்சென்ற அமெரிக்க ஆசாமிகள், பிறகு அவர்களை வைத்து திரைப்படம் உருவாக்குகின்றனர். கடைசியாக மதன்பாப் கண்டுபிடித்த சூப்பர் பவரை திருடிச்செல்ல, ரஷ்ய ரகசிய ஏஜெண்டாக ஒரு பெண் வருகிறார்.
அவர் யோகி பாபுவை காதல் திருமணம் செய்து, அதன்மூலம் பங்களாவுக்குள் நுழைந்து சூப்பர் பவரை திருட முயற்சிக்கிறார். வெள்ளைக்காரியை யோகி பாபு திருமணம் செய்திருப்பதால் கடுமையான கோபத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள் பாலா, தங்கதுரை, சேஷு, ரோபோ சங்கர் ஆகியோர், அவர்களைப் பிரிக்க பங்களாவுக்குள் செல்கின்றனர். உடனே ரஷ்ய பெண், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஓவியாவை அழகான அனிமேஷனாக உருவாக்கி பங்களாவுக்குள் நடமாட விடுகிறார்.
இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், லாஜிக் பற்றி கவலைப்படாமல் படத்தை இயக்கி இருக்கிறார் ஸ்வதேஷ் எம்.எஸ். குழந்தைகளை சிரிக்க வைப்பதற்காக சூப்பர்மேன், ஹல்க், ஸ்பைடர்மேன் போன்ற ஹாலிவுட் சூப்பர் பவர் கேரக்டர்களை திணித்திருக்கிறார். கிளாமருக்காக மட்டுமே ஓவியா வருகிறார், பாடலுக்கு ஆடுகிறார்.
படத்தில் எல்லா ஆண் கேரக்டர்களும் பெண் கேரக்டர்களைப் பார்த்து வழிவதும், வர்ணிப்பதுமாகவே இருக்கின்றனர். டைமிங் காமெடி மூலம் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். காமெடி கலாட்டாவாக நகரும் கதையில், எல்லா கேரக்டரும் பேசிக்கொண்டே இருப்பது சலிப்பு ஏற்படுத்துகிறது. சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். சாந்தன், தர்மபிரகாஷ் ஆகியோருடைய பின்னணி இசை படத்தை தாங்கிப் பிடிக்கிறது. யோகி பாபுவின் தீவிர ரசிகர்கள் சிரிக்கலாம்.