ஐதராபாத்: தனது வீட்டில் சிவராஜ்குமாருக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்தினார் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. அதேபோல் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். சிரஞ்சீவிக்கு ஒன்றிய அரசு, பத்மவிபூஷண் விருதை அறிவித்துள்ளது. இதற்காக அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிவராஜ்குமாரோ, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கே அவரை வாழ்த்த வந்துவிட்டார். நேற்று திடீரென சிரஞ்சீவியின் வீட்டுக்கு வந்தார் சிவராஜ்குமார். அவரை பார்த்ததும் நெகிழ்ந்துபோன சிரஞ்சீவி, அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.
இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், சிரஞ்சீவி வீட்டில் தயாரான தடபுடல் விருந்து சிவராஜ்குமாருக்காக பரிமாறப்பட்டது. சிரஞ்சீவியும் சிவராஜ்குமாரும் சேர்ந்து அந்த அறுசுவை உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.
இந்த புகைப்படங்கள்தான் நேற்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் டிரெண்டிங் ஆகி, வைரல் ஆனது. இரு சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்களும் ‘இதுதான் ஸ்டார் விருந்து’ என்றும், ‘விருந்தோம்பலை மதிக்கும் சிரஞ்சீவி’ என்றும் ‘சிவண்ணாவின் பெருந்தன்மை’ என்றும் ஷேக்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கினார்கள்.