மும்பை: பிரபல நடிகை தனுஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு நடிகை ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு நடிகையான ராக்கி சாவந்த் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுபற்றி தனு நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 2008ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தில் நானும், ராக்கி சாவந்தும் நடித்தோம். அப்போது எனக்கும், ராக்கி சாவந்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரை தயாரிப்பாளர் நீக்கினார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு சிலர் மீது நான் ‘மீடூ’ புகார் அளித்தேன். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராக்கி சாவந்த், எனக்கு எதிராக பல்வேறு பாலியல் அவதூறுகளை பரப்பினார். அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. நடிகர் நானா படேகர், தன்னை சமூக சேவகராக காட்டிக் கொள்கிறார். அதுபோன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். குடும்பத்துடன் வாழ்பவனே நல்லவன். நடிகைகளுடன் பழகுவதும், அவர்களுடன் ஜாலியாக இருப்பவனும் நல்ல மனிதன் அல்ல. நானா படேகர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வசிக்கவில்லை’ என்றார்.
54