ஸ்ரேயா நடித்துள்ள பன்மொழிப் படம், ‘மியூசிக் ஸ்கூல்’. ஷர்மான் ஜோஷி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைக்க, ஆந்திரா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்கியுள்ளார். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஸ்ரேயா கூறியதாவது: நான் மியூசிக் டீச்சராகவும், ஷர்மான் ஜோஷி டான்ஸ் டீச்சராகவும் நடித்துள்ளோம். குழந்தைகளை விருப்பம் அறிந்து, அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற மெசேஜுடன் படம் உருவாகியுள்ளது.
நிறைய குழந்தைகளுடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. அவர்களுடன் சேர்ந்து நானும் குழந்தையாகி விட்டேன். என் அம்மா மியூசிக் டீச்சர் என்பதால், அவரை இன்ஸ்பிரேஷனாக நினைத்து நடித்தேன். பள்ளியில் படிக்கும்போது, நான் வாங்கிய மார்க் பற்றி அம்மா கவலைப்பட்டது இல்லை. அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதும் இல்லை. ஆனால், குழந்தைகளை அதிக மார்க் எடுக்க டார்ச்சர் செய்யும் அம்மாக்களை பார்த்திருக்கிறேன். இது ரொம்ப தவறு. தமிழில் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. முன்பெல்லாம் ஓரளவு தமிழில் பேசுவேன். இப்போது மறந்துவிட்டது.
தமிழ் கற்றுக்கொள்ளாதது பெரிய தவறு என்று இப்போது புரிந்துகொண்டேன். முன்பு ஒரு பாடலுக்கு ஆடினேன். இப்போது ஆடவில்லை. யாராவது வாய்ப்பு கொடுத்தால் ஆடுவேன். ஒரு பாடலுக்கு ஆடுவது சுலபம் இல்லை. அதை எல்லோராலும் செய்ய முடியாது. நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்காததற்கு காரணம், நல்ல வாய்ப்புகள் வராததுதான். இதை ஓப்பனாக சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. புது இயக்குனர் படத்தில் நடிப்பது பற்றி தயக்கம் இல்லை. என் முதல் படத்தை இயக்கியவரே புதியவர்தான். நான் அதிகமாக நடித்தது புதியவர்களின் இயக்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.