மும்பைதனுஷை வைத்து இளையராஜாவின் பயோபிக்கை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக, பாலிவுட் இயக்குனர் ஆர்.பால்கி என்ற ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்நிலையில், இந்தியில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் ரிலீசான ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கியுள்ள ஆர்.பால்கி அளித்திருக்கும் பேட்டி வருமாறு: தனுஷ் ரொம்ப எளிமையானவர். என்ன செய்ய வேண்டும் என்று நன்கு தெரிந்தவர்.
அவரை நான் இயக்கும்போது ஆம், இல்லை என்பதற்கு தலையை அசைத்தால் மட்டும் போதும். உடனே அதைப் புரிந்துகொண்டு வேறு மாதிரி நடிப்பார். அவர் ஒரு நடிகர் மட்டுமின்றி, நல்ல எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர். அவரது நடிப் புக்கு ரசிகனாக இருந்த நான், இப்போது அவரது எழுத்துக்கும், இயக்கத்துக்கும் ரசிகனாக மாறியுள்ளேன். ஒவ்வொரு முறையும் அவரை நான் பார்க்கும்போது, ‘எப்படி இவ்வளவு எளிதாக எழுதுகிறீர்கள்?’ என்று ஆச்சரியத்துடன் கேட்பேன். அதற்கு அவர், ‘அது எனக்கு இயற்கையாக வருகிறது’ என்று சொல்வார்.
என் வாழ்நாள் கனவு என்பது, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தனுஷை நடிக்க வைத்து இயக்குவதுதான். அப்படி நடந்தால், அது நான் தனுஷுக்கு கொடுக்கக்கூடிய பெரிய பரிசு அதுவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம், என்னைப்போல் தனுஷும் இளையராஜாவின் ரசிகர். இவ்வாறு ஆர்.பால்கி கூறினார். அவர் இந்தியில் இயக்கிய ‘சீனி கம்’, ‘பா’, ‘ஷமிதாப்’, ‘கி அன்ட் கா’ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார். மேலும், இளையராஜாவின் இசையில் பாட ஆசைப்பட்ட தனுஷ், வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தில், இயக்குனர் சுகா எழுதியுள்ள ‘ஒன்ேனாட நடந்தா…’ என்ற பாடலை அனன்யா பட்டுடன் இணைந்து பாடினார்.