ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படம், வரும் ஜூன் 7ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘அவதார்’. 160 நிமிடங்கள் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்று பரவசப்படுத்திய இப்படம், ரூ.1,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, ரிலீசுக்குப் பிறகு உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
அதுவரை வேறெந்தப் படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியது. இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் 2வது பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 16ல் வெளியானது. முதல் பாகத்தைப் போல் மிகச்சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சுமார் ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம், ரிலீசுக்குப் பிறகு உலகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 7ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.