ஐதராபாத்: தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமய்யா, சமுத்திரக்கனி நடித்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம், ‘விநோதய சித்தம்’. இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் ஆகியோர் நடிப்பில், ‘ப்ரோ’ என்ற பெயரில் சமுத்திரக்கனி எழுதி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இப்படம் திரைக்கு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி, ‘ப்ரோ’ படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். இதையடுத்து அவர் 2 படங்களை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்குகிறேன். அடுத்து துல்கர் சல்மான் நடிக்க, ராணா டகுபதி தயாரிக்கும் பான் இந்தியா படத்தை இயக்குகிறேன். விரைவில் இப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.