சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 7 விருதுகளை அள்ளி, உலகத்தின் கவனத்தை ஈர்த்த படம் இது. சிறந்த நடிகைக்கான விருதை மிஷெல் யோ பெற்றார். சிறந்த இயக்குனர்களுக்கான விருதை டேனியல் கிவான், டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர். சிறந்த படத்தொகுப்புக்கான பால் ரோஜர்ஸ் பெற்றார். மேலும் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்பட 7 விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. அப்படி என்றால், படம் மிகப் பிரமாண்டமாக இருக்குமோ என்று நினைத்தால் அதுதான் இல்லை. ரொம்ப சிம்பிளான படம். சீன நடுத்தரக்குடும்பம் அமெரிக்காவில் வசிக்கிறது. குடும்பத்தலைவி மிஷெல் யோ லாண்டரி கடை நடத்துகிறார்.
அதற்கு குடும்ப உறுப்பினர்கள் உதவுகின்றனர். மிஷெல் யோவின் மகள் அம்மாவின் கட்டுப்பாடு பிடிக்காமல், தனியாக விடுதியில் தங்கிப் படிக்கிறாள். லாண்டரி தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் தவிக்கிறது குடும்பம். இதற்கிடையே வருமான வரியை ஒழுங்காக கட்டாமல் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி, அவர்களை விசாரணைக்கு அழைக்கும்போது அடுக்கடுக்கான பிரச்னைகள் தொடங்குகிறது.
அது என்னவென்று சொன்னால்தான் கதை புரியும். பூமியில் நாம் வாழ்வதைப்போல், இந்த அண்டவெளியில் பல பூமிகள் இருக்கிறது. அங்கும் இதே சூழ்நிலையுடன் நாம் வாழ்கிறோம். ஆனால், அங்கு வெவ்வேறு குணாதிசயம், திறமை கொண்டவர்களாக இருக்கிறோம். உதாரணத்துக்கு, படத்தின் நாயகி இந்த பூமியில் லாண்டரி கடை நடத்துகிறார். இன்னொரு பூமியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக இருக்கிறார். மற்றொரு பூமியில் விஞ்ஞானியாக இருக்கிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், மற்ற பூமியில் வசிப்பவர்களுடன் தொடர்புகொள்ள வசதி கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே கதை. வேடிக்கையாகத் தோன்றும் இக்கதையை திரையில் வடிவமைத்த விதம், சொன்ன விதம், சொல்லப்பட்ட கருத்துகள் ஆகியவற்றால் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்கொண்டு வந்துள்ளது. ‘எல்லா தவறுகளையும் சரி செய்ய வாய்ப்பு கொடுங்கள். உலகத்தின் முன்னால் நீங்கள் எல்லாம் எதுவுமே இல்லை. யுனிவர்சிலேயே பெரிய சக்தி அன்பு’ என்பதுதான் படம் சொல்லும் செய்தி. தற்போது சோனி லிவ் தளத்தில் தமிழில் வெளியாகியுள்ளது. அனைவரும் பார்க்கலாம்.