சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 171 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் என 4 சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கூட்டணி 5வது முறையாக இப்படத்தில் இணைகிறது. இதனால் இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வெற்றிப் படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும் ரஜினி, சன் பிக்சர்சுடன் லோகேஷ் கனகராஜ் முதல்முறையாக இணைவதாலும் இந்த படம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இதில் ரஜினிகாந்த் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இதையடுத்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.