சென்னை: கமல்ஹாசன், மணிரத்னம் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளார்.‘பொன்னியின் செல் வன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் `தக் லைஃப்’ என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். `நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், `தக் லைஃப்’ படத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய `கடல்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். அவருக்கு இந்தப் படதிலும் மணிரத்னம் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது அவருக்கு கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கவுதம் கார்த்திக் ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.