வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் விலகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சூர்யா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராக இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் ஷூட்டிங்கை தொடங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். வாடிவாசல் படத்தின் தாமதத்திற்கு வெற்றிமாறன் தான் காரணம் என கூறப்படுகிறது.
அவர் விடுதலை 2 படத்தில் பிசியானதால் வாடிவாசல் படப்பிடிப்பை அடுத்தாண்டுக்கு தள்ளிவைத்துள்ளனர். சி.சு.செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து தான் வாடிவாசல் திரைப்படம் தயாராக உள்ளது. கலைப்புலி எஸ் தாணு தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா, தனது வீட்டில் இரண்டு காளை மாடுகளை வளர்த்து அதனுடன் பயிற்சியும் எடுத்து வருகிறாராம். வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் விலகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவலால் ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
ஒரு சிலரோ ஜிவி பிரகாஷுக்கும் வெற்றிமாறனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதன் காரணமாக தான் ஜிவி பிரகாஷ் அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறி வருகின்றனர். சிலரோ, சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சென்னை வருகை தந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது வெற்றிமாறனுக்கு பிடிக்காததால், அவர் ஜிவி பிரகாஷை இப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் ஜிவி பிரகாஷ் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. அவர் சொன்னால் தான் இது உண்மையா, இல்ல வதந்தியா என்பது தெரியவரும்.