ஐதராபாத்: ‘ஹீரோக்களிடம் இப்படி கேட்பீர்களா?’ என நிருபர் மீது நடிகை ஸ்ரேயா கடும் கோபம் அடைந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஐதராபாத் சென்றிருந்தார் ஸ்ரேயா. அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், இந்த வயதிலும் உடலை கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன என்று கேட்டார். இந்த கேள்வியை அந்த நிருபர் கேட்டதும், ஸ்ரேயாவின் முகம் மாறியது. ‘ஏன் இதுபோல் கேட்கிறீர்கள். பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? இதே கேள்வியை யாராவது ஒரு ஹீரோவிடம் கேட்டு இருக்கிறீர்களா? எனது தோழிகள் சிலரிடமும் சில ஆண்கள் குழந்தை பெற்ற பிறகும் இளமையாகவே இருக்கிறீர்கள் என சொல்கிறார்கள்.
பெண்களுக்கு மட்டும்தான் வயதாகுமா? ஆண்களுக்கு வயதே ஆகாதா? இதுபோல் பாரபட்சத்துடன் எதையும் பார்க்காதீர்கள்’ என படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரேயா. உடனே அந்த நிருபர், நான் என்ன சொல்லிவிட்டேன், உங்களது அழகின் ரகசியம் தானே கேட்டேன். இதை பாராட்டாக எடுத்துக்கொள்ளலாமே என அமைதியாக சொன்னார். ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாத ஸ்ரேயா, இது எல்லாம் ஒரு பாராட்டா? நீங்கள் பெண்களை மட்டமாக நினைக்கிறீர்கள் என மீண்டும் கோபமாக சொன்னார். இதனால் அந்த நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேள்விகளை இத்துடன் முடித்துக்கொள்வதாக நிருபர்கள் தெரிவித்தனர்.