சென்னை: மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் படம் ‘அடியே’. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கவுரி கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். வருகிற 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் முதலில் வேறொரு ஹீரோயின் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு கவுரி கிஷன் நடித்தார் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது: இந்தப் படத்திற்கு முதலில் வேறு ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்திருந்தோம். அவருக்கு தனியாக போட்டோ ஷூட் நடத்தி அவர்தான் நாயகி என்று முடிவு செய்திருந்தோம். படப்பிடிப்பிற்கு பத்து நாள் முன்னதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் அந்த நாயகியை இணைத்து போட்டோ ஷூட் நடத்தியபோது அந்த ஜோடி பொருத்தமாக இல்லை என்று தோன்றியது. அவருக்கு பதிலாக கௌரி கிஷனை தேர்வு செய்தோம்.