சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, கடந்த மே 24ம் தேதி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம், ‘பி.டி சார்’. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, தியாகராஜன், காஷ்மீரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், கே.பாக்யராஜ், பிரபு, ஆர்.பாண்டியராஜன், தேவதர்ஷினி, இளவரசு, பட்டிமன்றம் ராஜா, வினோதினி வைத்தியநாதன் நடித்தனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்தார்.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்கினார். இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும்போது, ‘பெண்கள் பணியாற்றும் மில்லில், இப்படத்தின் இரண்டு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிட்டனர் என்ற தகவலை தயாரிப்பாளரிடம் சொன்னபோது, இப்படம் வசூலித்தது என்பதை விட அதிகமாக சந்தோஷப்பட்டார்.
அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடன் இணைந்து நடித்த அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இதுபோன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட ஒரு கதையில் என்னை ஹீரோவாக நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி. இப்படம் பெற்றுள்ள வெற்றியை விட, எனக்கு ஏற்பட்டுள்ள மன திருப்தியை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்னும் எனக்கு அதிக பொறுப்பு கூடியிருப்பதாக நம்புகிறேன்’ என்றார்.