தஞ்சாவூர்: தி அமெரிக்க பிரசிடெண்ட், தி கேம் உள்பட ஏராளமான படங்களில் நடித்த ஹாலிவுட் முன்னணி நடிகர் மைக்கேல் டக்ளஸ், ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உள்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. அதை வாங்க இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ், தனது குடும்பத்தினருடன் இந்தியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களை பார்வையிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு வந்த அவர், நேற்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தனது மனைவி கேத்தரின் செடா ஜோன்ஸ், மகன் டிலான் ஆகியோருடன் சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மைக்கேல் டக்ளஸ் தஞ்சை பெரிய கோயில் முன்பு எடுத்த போட்டோவை தனது X தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‘தஞ்சாவூர் உண்மையிேலயே அழகானது. இந்தியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.