சென்னை: இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ராமானுஜர். ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படமாக இது உருவாகியுள்ளது. ராமானுஜராக டி. கிருஷ்ணன் நடித்துள்ளார். ஹியாகிரீவா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் இது. இதில் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர். பாடல்கள் வாலி, ஒளிப்பதிவு மாதவராஜ், வசனம் ரங்கமணி, எடிட்டிங் சுரேஷ் அர்ஸ், இயக்கம் ரவி வி. சந்தர், திரைக்கதை எழுதி, தயாரித்துள்ளார் டி. கிருஷ்ணன். படம் பற்றி ராமானுஜராக நடித்துள்ள டி.கிருஷ்ணன் கூறியதாவது:
இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம். மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத்தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம். ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார். சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இசைஞானியின் இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம். படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்றார்.