சென்னை: ‘இந்தியன் 2’ படத்தில் இன்ட்ரோ டீசர் நேற்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, குல்ஷன் குரோவர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் இன்ட்ரோவை வெளிப்படுத்தும் விதமான டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
தமிழ் டீசரை ரஜினிகாந்த், தெலுங்கு டீசரை ராஜமவுலி வெளியிட்டனர். மலையாள டீசரை மோகன்லாலும் இந்தி டீசரை ஆமிர்கானும் கன்னடத்தில் சுதீப்பும் வெளியிட்டனர். இந்த டீசரில் ‘இந்தியன்’ முதல் பாகத்தில் கிளைமாக்சில் எப்போது தவறு நடந்தாலும் திரும்ப வருவேன் என கமல் பேசும் வசனம் காட்சியுடன் இடம்பெறுகிறது. இந்தியாவில் பல இடங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
அந்த சமயத்தில் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கம்பேக் இந்தியன் என்ற ஹேஷ்டேக்கை வைரல் ஆக்குகின்றனர். சொன்னது போல் கமல் மீண்டும் வருவது போல் டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.