சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாமிலி
சென்னை: சர்வதேச ஓவிய கண்காட்சியில் நடிகை ஷாமிலியின் ஓவியங்கள் இடம்பெற்று கவுரவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாகவும், சமூகத்தில் எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் விதமாக தனது ஓவிய படைப்புகளை உருவாக்கி வருகிறார் ஷாமிலி. இவரது படைப்புகளை பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் 2019ம் ஆண்டில் கண்காட்சியாக வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் தன்னுடைய படைப்புகளை கண்காட்சியாக இடம்பெற வைத்திருக்கிறார்.
துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் 60 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சர்வதேச பார்வையாளர்களை வெகுவாக கவரக்கூடிய துபாய் உலக வர்த்தக மையத்தில் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 12ம் தேதி வரை நான்கு நாள் நடைபெற்ற சர்வதேச ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற இவரது படைப்புகளை பார்வையிட்ட பார்வையாளர்கள், இவரின் திறமையை வியந்து பாராட்டியதுடன், தங்களுடைய எண்ணங்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.