சென்னை: கடந்த 2007ல் அமீர் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘பருத்திவீரன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார். இது அவரது 25வது படமாகும். மற்றும் அனு இம்மானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.டி.விஜய் மில்டன், மலையாள நடிகர் சனல் அமன் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் ‘கார்த்தி 25’ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது சூர்யா பேசியதாவது:
கமல் சார் பூஜை போட்டு ‘பருத்திவீரன்’ படம் தொடங்கியது. பிறகு படத்தை பார்த்த ரஜினி சார், ‘கிடைத்த வாய்ப்பை கார்த்தி சரியாக பயன்படுத்திக் கொண்டார்’ என்று பாராட்டினார். என்னை விட கார்த்தியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஞானவேல் ராஜா. ‘இவ்ளோ கஷ்டப்படறதை விட, நாலு பன்னிக்குட்டிய மேய்க்கலாம்’ என்று சில நேரங்களில் நானும், கார்த்தியும் பேசி இருக்கிறோம். ஆனால், ரசிகர்கள் எங்களிடம் இது போன்ற படங்களையே கேட்டனர். கஷ்டப்பட்டு சிறப்பான கதைகளை தேர்வு செய்ய வைத்தனர். ரசிகர்கள் என்னிடம், ‘உங்களை விட, உங்கள் தம்பி கார்த்தியையே எங்களுக்கு மிகவும் பிடிக்கும்’ என்று சொல்வார்கள். என்னை விட கார்த்தி சினிமாவுக்கு அதிக மரியாதை கொடுப்பார். நான் படிப்பை முடித்து கார்மென்ட் பிசினஸ், அது இது என்று சுற்றிவிட்டு சினிமாவில் நடிக்க வந்தேன். கார்த்தி அப்படி இல்லை. அவர் இஷ்டப்பட்டதை குறிக்கோளாகக் கொண்டு ஓடினார். இத்தனை வருடங்களில் அவர் 50 படங்களிலாவது நடித்திருக்கலாம்.
தரமான கதைகளை தேர்வு செய்து, நல்ல படங்களை தர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார். பல நேரங்களில் நான் கார்த்தியைப் பார்த்து பொறாமைப்பட்டுள்ளேன், மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளேன்.
அவன் என்னை விட எல்லாவற்றிலும் சிறந்தவன். குடும்பத்துக்கு அதிக நேரம் செலவிடுவான். அப்பா, அம்மாவை வருடத்துக்கு இரண்டு முறை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வான். சினிமாவில் என் ரூட் வேறு, கார்த்தி ரூட் வேறு. கைலி கட்டுவது, மது அருந்துவது போன்ற கேரக்டர்கள் என்னை தேடி வந்தால், அதை அப்படியே கார்த்தி பக்கம் நகர்த்தி விடுவேன். ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் மூலம் லோகேஷ் கனகராஜ் எனக்கு வேறுபரிமாணம் கொடுத்தார். ‘டில்லி’க்கு பிறகு ‘ரோலக்ஸ்’ என்பதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு வருடமாகவே ரசிகர்களை நான் சந்திக்கவில்லை. அவர்களின் காத்திருப்புக்கு ஏற்ற கொண்டாட்டம், ‘கங்குவா’ படத்தில் காத்திருக்கிறது. ராஜூ முருகனின் ‘ஜப்பான்’ படம் பெரிய வெற்றிபெற அனைவரையும் வாழ்த்துகிறேன்.