திருமணமாகி ஒரு மகனுக்கு தாயான பின்பு, முன்பைவிட பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் நடித்த ‘பகவந்த் கேசரி’ படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர், தற்போது நடித்து வரும் தெலுங்கு படம், ‘சத்யபாமா’. இதில் அவர் சத்யபாமா ஐபிஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘வைஜயந்தி ஐபிஎஸ்’ போல் அதிரடி ஆக்ஷன் கலந்த போலீஸ் படமாக உருவாகி வரும் இதில், நிறைய சண்டைக் காட்சிகளில் காஜல் அகர்வால் துணிச்சலுடன் நடித்துள்ளார்.
தெலுங்கில் அவர் நடிக்கும் சோலோ ஹீரோயின் படமான இதையடுத்து, ‘உமா’ என்ற இந்திப் படத்திலும் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், ‘சத்யபாமா’ படத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சேலை அணிந்து காவல் நிலையம் வரும் காஜல் அகர்வால், லாக்கப்பில் இருக்கும் கைதிகளை கடுமையாக தாக்குகிறார். பிறகு ரிக்கார்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தலைமுடியை அள்ளி முடித்தபடி செல்கிறார்.