லாஸ்ஏஞ்சல்ஸ்: பிரபாஸின் நடிப்பில் ஆதிபுருஷ் படத்தையடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ (தற்காலிக தலைப்பு). மிகப்பெரிய பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தினை தேசிய விருது பெற்ற மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பான் இந்திய நட்சத்திரங்கள் அணி திரண்டு இப்படத்தில் நடித்து வருகின்றனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகிவரும் புராஜெக்ட் கே திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 ல் பான் இந்திய திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டே வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்தது படத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டி ஆவலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் டைட்டில், டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட படக்குழு முன் வந்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் இம்மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் சான்டியாகோவில் நடைபெறவுள்ள காமிக்கான் என்ற சர்வதேச மாநாட்டில் டைட்டில் மற்றும் டீசர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. உலக ரசிகர்களின் விருப்ப மேடையான காமிக்கான் மேடையில் முதல் முறையாக மேடையேறும் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ‘புராஜெக்ட் கே’ படம் தற்போது பெற்றுள்ளது.