சென்னை : மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்தி பிறகு அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தற்போது தனது 25வது படமான ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைக்கு வந்த ‘குக்கூ’ ‘ஜோக்கர்’ ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களின் இயக்குனர் ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் தீபாவளியன்று திரைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். இதற்காக எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு கெட்டப்புகளில் கார்த்தி தோன்றிய டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.