சென்னை: சிறிய இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழுநீள காமெடி படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இதை ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது. முக்கிய வேடங்களில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமய்யா, சிங்கம்புலி, வையாபுரி, முத்துக்காளை, மாரிமுத்து, ரவிமரியா, ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்ராயன், லேகாஸ்ரீ, டிகேஎஸ், சதீஷ் ஆகியோருடன் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி நடிக்கின்றனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் சாய் ராஜகோபால் கூறுகையில், ‘சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு காமெடி டிராக் எழுதினேன். பிறகு இயக்குனர்கள் மணிவாசகம், அர்ஜூன், டி.பி.கஜேந்திரன் ஆகியோருடன் பணியாற்றினேன். இதையடுத்து பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடித்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ படத்தையும் மற்றும் சிம்ரன், ‘பாய்ஸ்’ மணிகண்டன் நடித்த ‘கிச்சா வயசு 16’ படத்தையும் இயக்கினேன். இப்போது இயக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் அரசியல் கதையுடன், முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது’ என்றார். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.