பெங்களூரு: பான் இந்தியா நடிகர் கிச்சா சுதீப்புக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி அவர் நடிக்கும் புதிய பான் இந்தியா படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மகதீரா’, ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற வெற்றிப் படங்களின் கதை, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை அளித்துள்ள ஆர்.சி ஸ்டுடியோ, இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.
வித்தியாசமான கெட்டப்பில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஆர்.சந்துரு இயக்குகிறார். இப்படம் பான் இந்தியா கான்செப்ட்டை உடைத்து, உலகளாவிய திரைப்படத் தரத்தில், இதுவரை இல்லாத வகையில் உருவாக்கப்படும் ஒரு இந்தியப் படமாக அமைய இருக்கிறது என்று ஆர்.சி ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.