சென்னை: விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று ‘விஜய் 68’ படத்தின் பூஜை நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வை வெங்கட் பிரபு தொடங்கி விட்டதாகவும் விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பார் என தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் ஹீரோயின் வேடத்தில் நடிக்க விஜய்யுடன் இதுவரை ஜோடி சேராத பிரபல நடிகை ஒருவர் நடிப்பார் என படக்குழு கூறுகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பை விஜய் முடித்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் பிறந்த நாளன்று புதிய படத்தின் பூஜை நடைபெறும் என்பதால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கும் என்கிறது படக்குழு.